மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி: சாய்ந்து விழுந்த மின் கம்பத்தை தடயவியல் உதவி இயக்குனர் ஆய்வு

சிட்லபாக்கத்தில், மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து சாய்ந்து விழுந்த மின் கம்பத்தை தடயவியல் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2019-09-18 23:00 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள முத்துலட்சுமி நகர், சாரங்க அவென்யூ கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேதுராஜ்(வயது 42). லோடு ஆட்டோ டிரைவர். இவர் வீட்டின் எதிரே நாய்களுக்கு சோறு வைத்துவிட்டு வரும்போது, வீட்டின் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

இந்தநிலையில் சாய்ந்து விழுந்த மின் கம்பத்தை தடயவியல் உதவி இயக்குனர் சோபியா நேரில் ஆய்வு செய்தார். உடைந்த மின் கம்பத்தின் தரம், சேதமடைந்த பகுதி, அதன் நீளம், அகலத்தை ஆய்வு செய்த அவர், மின்கம்பம் விழுந்தது குறித்து அந்த பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் உடைந்த மின் கம்பம், விபத்து நடந்த இடம் ஆகியவற்றை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆய்வுக்கு கொண்டு சென்றார்.

மின் கம்பம் விழுந்த இடத்தின் பின்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் ஜூலை மாதம் 20-ந்தேதி வரை மட்டுமே பதிவாகி இருந்தது. இதனால் மின்கம்பம் சாய்ந்து விழுந்த காட்சிகள் பதிவாகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்