மகளின் தோழியை கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் சிறை கோர்ட்டு தீர்ப்பு

மகளின் தோழியை கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-09-18 23:00 GMT
திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் 5-ம் பிரகாரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 39). ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். அந்த குடும்பத்தில் உள்ள 16 வயது சிறுமியும், நடராஜனின் மகளும் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.

இதனால் மகளின் தோழியான அந்த சிறுமியுடன் நடராஜனுக்கு நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நடராஜன் அந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார சீண்டல்களில் ஈடுபட்டார்.

கர்ப்பமாக்கினார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் வீட்டை மாற்றிக்கொண்டு அடுத்த தெருவுக்கு சென்றுவிட்டனர். அந்த வீட்டிற்கும் நடராஜன் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவள் கர்ப்பிணியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. தனது கர்ப்பத்துக்கு நடராஜன் தான் காரணம் என சிறுமி கூறினாள். இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது.

தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கர்ப்பத்தை கலைத்த பின்னர் அவளது பெற்றோர் இதுபற்றி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடராஜனை கைது செய்து திருச்சி மகிளா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

10 ஆண்டு சிறை

சாட்சிகள் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நடராஜனுக்கு பாலியல் வன்முறைகளில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும், வீடு தேடி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒரு வருடம் சிறை தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஒரு வருடம் சிறை தண்டனை, ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

நடராஜன் சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் கூறி இருப்பதால் நடராஜன் 10 ஆண்டு மட்டும் சிறை தண்டனை அனுபவிப்பார் என்று இந்த வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராகி வாதாடிய அரசு வக்கீல் வெங்கடேசன் கூறினார்.

மேலும் செய்திகள்