கோவை போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வியாபாரி கைது

கோவையில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-09-18 22:45 GMT
கோவை,

கோவை மைல்கல் அருகே உள்ள சுகுணாபுரத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 49). இவர் உக்கடத்தில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வபுரத்தில் இரு கோஷ்டிக்கு இடையே நடந்த தகராறில் முகமது உசேனின் மகன்கள் அலாவுதீன்(21), அப்பாஸ்(20) ஆகிய 2 பேரை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர்.

இது பற்றிய தகவலை அவர்களது தந்தை முகமது உசேனுக்கு தெரியப்படுத்தி அவரை விசாரணைக்காக போலீஸ்நிலையம் வருமாறு அழைத்தனர். அதன்பேரில் அவர் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் எனது மகன்களை எப்படி கைது செய்யலாம் என்று கூறி அவர் வாக்குவாதம் செய்தார்.

இதை அங்கு பணியில் இருந்த ஏட்டு பிரதீப் தனது செல்போனில் பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது உசேன் போலீஸ் சீருடையில் இருப்பதால் வீடியோ எடுப்பதா? என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏட்டு பிரதீப் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் முகமது உசேன் மீது போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்