மசினகுடியில் உள்ள குரும்பர்பாடி ஏரியில் படகு இல்லம் தொடங்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மசினகுடியில் உள்ள குரும்பர்பாடி ஏரியில் படகு இல்லம் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மசினகுடியும் ஒன்று. இது முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் அமைந்து உள்ளது. இந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மசினகுடியின் இயற்கை அழகையும், அங்குள்ள வனப்பகுதியில் வாழ்ந்து வரும் வனவிலங்குகளையும் கண்டு ரசிக்க ஆண்டுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்க ஏராளமான தனியார் விடுதிகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையில் யானை வழித்தடத்தில் உள்ளதாக கூறி கடந்த ஆண்டு 38 தனியார் தங்கும் விடுதிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டது. இதனால் மசினகுடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தங்கும் விடுதிகளுக்கு சீல் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு ஆகிய காரணங்களால் மசினகுடி பகுதி மக்கள் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே வேலை கிடைக்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்து தரப்படுமா? என்று அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குறிப்பாக மசினகுடி குரும்பர்பாடி பகுதியில் உள்ள ஏரியில் படகு இல்லம் தொடங்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
மசினகுடியில் குரும்பர்பாடி ஏரியும், மரவகண்டி அணையும் உள்ளன. இயற்கை எழில் சூழலில் மிகவும் ரம்மியமாக இருக்கும் அந்த நீர் நிலைகள், தற்போது தொடர் மழை காரணமாக நிரம்பி வழிகின்றன.
குரும்பர்பாடி ஏரியில் தண்ணீர் நன்றாக இருப்பதால் பல்வேறு வகையான பறவைகளும் வந்து செல்கின்றன. பறவைகளை காண சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இதனால் குரும்பர்பாடியை சுற்றுலா தலமாக மாற்றி, ஏரியில் படகு இல்லம் தொடங்க வேண்டும். இதனால் சுற்றுலா தொழில் வளரும். எங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.