இருளில் மூழ்கி கிடக்கும் நாகை - செல்லூர் சாலை மின்விளக்குகள் பொருத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகை - செல்லூர் சாலை இருளில் மூழ்கி கிடப்பதால் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை பப்ளிக் ஆபிஸ் சாலையில் இருந்து செல்லூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலை உள்ளது. செல்லூர், பாலையூர், அழிஞ்சமங்கலம், ஐவநல்லூர், சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் நாகையில் உள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் நாகை கிழக்கு கடற்கரை சாலையையும், புதிய பஸ் நிலையத்தை இணைக்கும் இந்த பிரதான சாலையில் பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆட்டோக்களிலும் மற்றும் நடந்தும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் சாலையில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. ஒரு சில இடங்களில் மின்கம்பங்களில் பொருத்தப்பட்ட மின்விளக்குகளும் எரியாமல் உள்ளது. இதனால் அந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இருளில் சூழ்ந்த கிடக்கும் சாலையில் செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனால் இரவில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் நாகை - செல்லூர் சாலையில் மின்
விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.