சித்ரதுர்கா அருகே சோதனை ஓட்டத்தின்போது ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது - ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானது

சித்ரதுர்கா அருகே, சோதனை ஓட்டத்தின்போது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-17 23:30 GMT
சிக்கமகளூரு,

சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா குதாபுரா பகுதியில் விமானப்படை பயிற்சி தளம் உள்ளது.

இந்த விமானப்படை பயிற்சி தளத்தில் இருந்து நேற்று காலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டி.ஆர்.டி.ஓ.) சொந்தமான ‘ரஸ்டம்-2’ என்ற ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆளில்லா விமானம், சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே அருகே ஜோடிசில்லேனஹள்ளி பகுதியில் வானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பரமேஷ் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் அந்தப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. இதனை கேட்ட ஜோடிசில்லேனஹள்ளி கிராம மக்கள், ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்று நினைத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் ஆளில்லா விமானம் கீழே விழுந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், கீழே விழுந்து நொறுங்கிய விமானத்திற்குள் யாராவது உள்ளார்களா? என்று பார்த்தனர். அப்போது அது ஆளில்லா விமானம் என்றும், அதில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செல்லகெரே போலீசாருக்கும், விமானப்படை பயிற்சி தள அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசாரும், விமானப்படை பயிற்சி தள அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானத்தை பார்வையிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இன்று (நேற்று) காலை சோதனை ஓட்டத்தின்போது இந்த ஆளில்லா விமானம் பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கி உள்ளது. அந்த விமானம் கீழே விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. அந்த ஆளில்லா விமானம் கீழே விழுந்தபோது, அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படும்‘ என்றார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, அவர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

சித்ரதுர்காவில் உள்ள விமானப்படை பயிற்சி தள அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘ரஸ்டம்-2‘ ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி உள்ளதாகவும், அதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

பாக்கு தோட்டத்தில் விழுந்து கிடக்கும் ‘ரஸ்டம்-2‘ ஆளில்லா விமானத்தின் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜோடிசில்லேனஹள்ளி கிராமத்தில் ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் தகவல் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனை கேட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து விமானத்தை பார்த்து செல்கிறார்கள். ஆளில்லா விமானம் பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்