பர்கூர் அருகே விபத்து; அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 வாலிபர்கள் பலி

பர்கூர் அருகே அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2019-09-16 22:45 GMT
பர்கூர், 

கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள முத்தாணி மேடு பக்கமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எதிரே ஒரு மோட்டார்சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும், எதிரே வந்த அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில், விபத்தில் இறந்தவர்கள் பர்கூரை அடுத்த மல்லப்பாடியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் சோமேஸ்வரன் (வயது 18), பர்கூர் காந்தி பஜாரை சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் சூர்யா (17), விருத்தாச்சலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் பாஸ்கர் (20) ஆகியோர் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 3 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்