சிவகாசி அருகே பரிதாபம்; காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்; சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் மனவருத்தம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Update: 2019-09-16 23:30 GMT
சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கூத்தப் பெருமாள். அவருடைய மகள் குருலட்சுமி (வயது 28). திருமணம் ஆகாத இவர் தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்து சட்டம் படித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த வாலிபருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தம் அடைந்து காணப்பட்ட மாணவி குருலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மாணவி குருலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் சட்டக்கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்