தஞ்சையில், வாய்க்காலை காணவில்லை கலெக்டரிடம் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் புகார்

தஞ்சையில் உள்ள வாய்க்காலை காணவில்லை என கலெக்டரிடம் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் புகார் அளித்தனர்.;

Update: 2019-09-16 21:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க துணை செயலாளர் அன்பு, மாவட்ட செயலாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் கலெக்டர் அண்ணாதுரையிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகரம் புதுப்பட்டினம் கிராம வருவாய் நிர்வாகத்திற்குட்பட்ட மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காந்திஜிசாலை அருகே 40 அடி அகலமுள்ள ராணி வாய்க்கால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது ராணிவாய்க்காலின் தலைப்பு முழுவதுமாக வர்த்தக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வாய்க்காலை காணவில்லை. இதையடுத்து நாங்கள் போராட்டம் நடத்தியதின் விளைவாக 1 வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எந்தவித சமரசமும் இன்றி அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் தயங்குவது ஏன்? எனவே நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் இந்தியா மூவ்மெண்ட் இயக்க தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் நஸ்ரத்பேகம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட துணைத்தலைவர்ஆசாத், தொகுதி செயலாளர் முகமதுஇக்பால் ஆகியோர் தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொலை, தற்கொலை மற்றும் விபத்துகளில் மரணமடையும் பெண்கள் பிரேத பரிசோதனைகள் ஆண் டாக்டர்களை கொண்டு செய்யப்படுகிறது. பெண்கள் இன்று எல்லாத்துறைகளிலும் தனித்துவத்துடன் சிறப்பாக பணியாற்றி வரும் இக்காலக்கட்டத்தில் பெண் உடல்களை பரிசோதனை செய்வதற்கு பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனைகளில் பிரசவ வார்டுகள் மற்றும் பிரசவ பணிகளில் ஆண்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். அரை மயக்கத்தில் பிரசவ அறைகளில் திறந்த நிலையில் பெண்கள் இருக்கும் போது அங்கு ஆண் பணியாளர்கள் வலம் வருவது பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்காகும். எனவே பெண்களின் கண்ணியத்தை காக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதனை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை ஒருங்கிணைந்த கிறிஸ்தவ போதகர்கள் கூட்டமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சையில் 80-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து ஒரே நிறுவனமாக செயல்பட்டு வருகிறோம். ஒட்டுமொத்த கிறிஸ்தவர்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த சபைகளுக்கென்று இதுவரையில் பொதுவான கல்லறை தோட்டம் இல்லை. இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய பெரிய அவஸ்தைகளையும், இன்னல்களையும், மன உளைச்சல்களையும் அடைகிறோம். எனவே எங்கள் பரிதாப நிலை கருதி ஆவன செய்து தஞ்சை தாலுகாவுக்குள் கல்லறை தோட்டத்திற்கு என்று நிலத்தை ஒதுக்கீடு செய்து எங்கள் துயர்நிலையை போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்க தஞ்சை மாவட்ட தலைவர் தங்கையன் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் குமணன், நிர்வாகிகள் மணிகண்டன், இளம்பரிதி, வாசு, சங்கர் மற்றும் ஆபரேட்டர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கேபிள் டி.வி. சேவை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் செயலற்று போன ஒரு நிறுவனத்தின் கேபிள் மூலம் இணைப்பு வழங்கி வருகிறார்கள். தற்போது அதில் ஒரு சில தனியாருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டால் எங்கள் கேபிள் வயர்களை துண்டித்து விடுகிறார்கள். மேலும் எங்களுக்கான தளவாடகையும் கட்ட முடியாத அளவிற்கு உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே ஒரு சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்காமல் அனைவருக்கும் ஒரே விகிதமாக கட்டணங்கள் வசூலிக்க வேண்டும். கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்