“135 டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்” கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு இருந்த 135 டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இது குறித்து அவர் நேற்று காலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி,
மத்திய அரசு சார்பில் தேசிய ஊட்டச்சத்து திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பினருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், பிறந்த குழந்தைகளுக்கு எந்தவிதமான உணவு கொடுக்க வேண்டும், ரத்த சோகை தடுப்பதற்கு என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்படுகிறது.
சுத்தம், சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து துறைகளும் இணைந்து உணவுத்திருவிழா, ரங்கோலி போட்டி நடத்துதல், விழிப்புணர்வு பேரணி நடத்துதல், மாணவ-மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடத்துதல், கிராமசபை கூட்டம் நடத்துதல், மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில 35 பள்ளிக்கூடங்களில் காய்கறி தோட்டங்கள் உள்ளன. இதே போன்று அனைத்து பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகளில் சிறிய அளவில் காய்கறி தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு முதல் 1,000-ம் நாள் மிகவும் முக்கியமானது. அந்த நாளில் ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை சாப்பிட வேண்டும். ஓட்டல்களுடன் இணைந்து ஊட்டச்சத்து மிகுந்த உணவு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் உத்தரவின்படி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி 1,500 கனஅடி தண்ணீர் செப்டம்பர் 15-ந் தேதி வரை திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இன்று(அதாவது நேற்று) முதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது திறக்கப்படும் தண்ணீரில் 1,500 கன அடி தூத்துக்குடி மாவட்டத்துக்கும், 1,000 கனஅடி நெல்லை மாவட்டத்துக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்(விளம்பர பலகை) வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தவிதமான விளம்பர பலகைகள் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீசில் தடையில்லா சான்று பெற்று மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பித்து உரிய அனுமதியை பெற வேண்டும். இதனை மீறி போர்டு வைத்தால், போர்டு வைத்தவர்கள், போர்டு பிரிண்டிங் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. இதுவரை 135 டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அரசு ஆணைப்படி மூடப்பட்டு உள்ளது. அங்கு இருந்த ரசாயனங்கள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. ஜிப்சம் மட்டும்தான் அங்கு உள்ளது. அதே நேரத்தில் உதவி கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள குழு அவ்வப்போது ஆலையின் உள்ளே சென்று, பசுமையை பராமரிக்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரும் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு, மடைகளை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.