மங்களூரு விமான நிலையத்தில் ரூ.5.88 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது - பயணியிடம் விசாரணை

மங்களூரு விமான நிலையத்தில், ரூ.5.88 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது. இதுதொடர்பாக பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2019-09-16 22:15 GMT
மங்களூரு,

மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மங்களூருவில் இருந்து துபாய்க்கு செல்ல ஒரு தனியார் விமானம் புறப்பட தயாரானது.

இந்த நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த ஒரு பயணியின் நடவடிக்கையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த பயணி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த தொழில் பாதுகாப்பு படையினர் அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அந்த பயணியின் பையில் வெளிநாட்டு பணம் இருந்தது. இதுகுறித்து தொழில் பாதுகாப்பு படையினர் விசாரித்த போது அந்த பயணி மங்களூருவை சேர்ந்த ஆன்டனி டிசோசா என்பதும், அவர் மங்களூருவில் இருந்து துபாய்க்கு வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதனால் அவரை பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆன்டனி டிசோசாவிடம், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5.88 லட்சம் வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்