மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வரலாறு காணாத வெற்றி பெறும் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வரலாறு காணாத வெற்றிபெரும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
புனே,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வரலாறு காணாத வெற்றிபெரும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் தேர்தல்
மராட்டியத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது இரண்டாவது கட்ட மகாஜனதேஷ் யாத்திரையை தொடங்கி உள்ளார். இந்தநிலையில் புனேயில் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வறட்சியற்ற மாநிலம்
மராட்டிய மாநிலத்தில் மகாஜனதேஷ் யாத்திரை தற்போது 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் சென்று 100-க்கும் அதிகமான தொகுதிகளை கடந்துள்ளது.
நாங்கள் எங்கு சென்றாலும், யாத்திரைக்கு மக்கள் பெரும் வரவேற்பை கொடுக்கிறார்கள். மக்கள் ஆதரவைப் பார்க்கும்போது, சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரிகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் உபரி மழைநீரை வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பி விடுவதன் மூலமாக மராட்டியத்தை வறட்சியற்ற மாநிலமாக மாற்றுவதில் எங்கள் அரசு கவனம் செலுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.