தாராவியில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3¾ கோடி மோசடி ஊழியர் கைது
தாராவியில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடியே 77 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
தாராவியில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடியே 77 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
போலி நகைகள்
மும்பை தாராவியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அண்மையில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மூலம் ரூ.3 கோடியே 77 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இந்த மோசடி வங்கி அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த மோசடிக்கு வங்கியின் நகை கடன் பிரிவில் நகைகளை பரிசோதித்து கொடுக்கும் ஊழியர் ராமசாமி (வயது43) என்பவர் மூளையாக செயல்பட்டதை கண்டுபிடித்தனர்.
ஊழியர் கைது
இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர். விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
தாதரில் இருந்து ராமசாமி போலி நகைகளை வாங்கி உள்ளார். மேலும் 12 போலி வாடிக்கையாளர்களை உருவாக்கி அவர்கள் மூலம் அந்த நகைகளை வங்கியில் அடகு வைக்க கூறினார்.
அதன்பேரில் வங்கிக்கு அவர்கள் அடகு வைக்க கொண்டு வந்த நகைகள் உண்மையான தங்க நகைகள் என மதிப்பு சான்றிதழ் வழங்கி உள்ளார். இதை நம்பி வங்கி சார்பில் அவர்களுக்கு அந்த வங்கி மேற்படி பெருந்தொகையை கடன் கொடுத்து உள்ளது. தனது திட்டத்துக்கு உதவிய போலி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய தொகையை கொடுத்து விட்டு மீதி பணம் அனைத்தையும் ராமசாமி எடுத்து கொண்டார் என்பது தெரியவந்தது.
12 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து போலீசார் ராமசாமி மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த மோசடியில் அவருக்கு உதவிய 12 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த தகவலை தாராவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாட்டீல் தெரிவித்தார்.