ஆரேகாலனி பிரச்சினையை வைத்து ஆதாயம் அடைய நினைப்பவர்கள் பற்றி ஆதித்ய தாக்கரே புரிந்துகொள்ள வேண்டும் பட்னாவிஸ் பேட்டி
ஆரேகாலனி பிரச்சினையை வைத்து ஆதாயம் அடைய நினைப்பவர்கள் பற்றி ஆதித்ய தாக்கரே புரிந்துகொள்ள வேண்டும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
ஆரேகாலனி பிரச்சினையை வைத்து ஆதாயம் அடைய நினைப்பவர்கள் பற்றி ஆதித்ய தாக்கரே புரிந்துகொள்ள வேண்டும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
ஆரேகாலனி இடம்
மும்பை ஆரேகாலனியில் 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான பணிமனை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக ஆரேகாலனியில் சுமார் 2 ஆயிரத்து 700 மரங்கள் வெட்டப்பட உள்ளன.
இந்தநிலையில் மெட்ரோ ரெயில் பணிமனைக்காக மரங்களை வெட்ட சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே, சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை வருவது குறித்து பேட்டியளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
அரசுக்கு சொந்தமான இடம்
ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க 13 ஆயிரம் எதிர்ப்புகள் வந்துள்ளன. இதில் 10 ஆயிரம் பெங்களூருவில் இருந்து செயல்படும் இணையதள பக்கத்தில் இருந்து வந்து உள்ளது. இந்த விவகாரத்தில் ஆதித்ய தாக்கரேயின் மனநிலையை புரிந்து கொள்கிறேன். ஆனால் ஆரேகாலனி விவகாரத்தை வைத்து ஆதாயம் அடைய நினைப்பவர்கள் பற்றியும் அவர் தெரிந்துகொள்ள வேண்டும். மாநில அரசு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தான் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளது.
மெட்ரோ ரெயில் 3-வது திட்டத்துக்கு ஜப்பான் நிறுவனம் நிதிஉதவி செய்து வருகிறது. ஒரு ஆண்டு ஆய்வு நடத்திய பிறகு தான் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க ஜப்பான் முன்வந்தது. ஆரேகாலனியில் பணிமனை அமைய உள்ள இடம் மாநில அரசுக்கு சொந்தமானதுஆகும். அந்த இடம் பன்முக உரியியல் தன்மையோ அல்லது வனத்துறைக்கு சொந்தமான இடமோ அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.