தூத்துக்குடி பகுதியில் பரவலாக மழை: உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-09-15 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

கடம்பூர் பகுதியில் 30 மி.மீ. மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை செய்து. ஏரல் பகுதியில் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை பெய்தது. இதனால் ஏரல் பஜார் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மதியம் சுமார் 20 நிமிடங்கள் மழை பெய்தது.

கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இந்த பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை பதிவானது. அதே போல் தென்திருப்பேரை, திருச்செந்தூர் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

உப்பளங்கள் மூழ்கின

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடந்து சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அதே போன்று கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

அங்கு உள்ள வாரச்சந்தையிலும் தண்ணீர் தேங்கியதால், சந்தையில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் உற்பத்தி தொடங்க சில நாட்கள் ஆகலாம் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அனல் காற்று வீசி வந்த தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இதமான சூழ்நிலை காணப்பட்டது.

மேலும் செய்திகள்