மரங்களும், கால்நடைகளும் இல்லாமல் மண்ணை வளமாக்க நம்மிடம் வேறு என்ன தொழில்நுட்பம் உள்ளது? ஜக்கி வாசுதேவ் கேள்வி

மரங்களும், கால் நடைகளும் இல்லாமல் மண்ணை வளமாக்க நம்மிடம் வேறு என்ன தொழில்நுட்பம் உள்ளது என்று ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-09-15 22:45 GMT
புதுச்சேரி,

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நதிப் படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம், கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரி முதல் திருவாரூர் வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை அவர் கடந்த 3-ந்தேதி தலைக்காவிரியில் தொடங்கினார். இந்த மோட்டார் சைக்கிள் பயணம் நேற்று முன்தினம் இரவு புதுவை வந்தடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை ஜக்கி வாசுதேவ் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு கவர்னர் கிரண்பெடி சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் மோட்டார் சைக்கிள் பயணம் அங்கிருந்து புறப்பட்டது. அதனை கவர்னர் கிரண்பெடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த பயணம் புஸ்சி வீதி வழியாக கம்பன் கலையரங்கத்தை வந்தடைந்தது.

அங்கு ஈஷா யோகா மையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தண்ணீர் விஷயத்தில் என்ன பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரியும். என்ன தீர்வு என்பது கூட நிறைய பேருக்கு தெரியும். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பது தான். இப்போது நான் வந்துள்ளேன். இனியும் காத்திருக்க வேண்டாம். இது செயல்படுவதற்கான தருணம்.

தற்போது உள்ள விவசாயிகளில் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே அவர்களின் குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புகின்றனர். இந்த நிலை இப்படியே நீடித்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிறகு நமது நாட்டில் விவசாயம் செய்வதற்கு யாருமே இருக்கமாட்டார்கள். நமது நாட்டில் 100 ஆண்டுகளாக பெய்யும் பருவமழை அளவில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் பெய்யும் மழைநீரை மண்ணில் பிடித்து வைத்து கொள்வதற்கு மரங்கள் இல்லாமல் போய்விட்டன. மண்வளம் பெற மரங்களின் இலை தழைகளும், கால்நடைகளின் சாணமும் வேண்டும். மரங்களை அழித்து விட்டோம். மாடுகள் எல்லாம் வெளிநாட்டுக்கு செல்கின்றன. மரங்களும், கால்நடைகளும் இல்லாமல் மண்ணை வளமாக்க நம்மிடம் வேறு என்ன தொழில்நுட்பம் உள்ளது?

நதிநீர் பெருக்கெடுத்து கடலுக்கு சென்று வீணாகிறது என்று பலரும் கூறுகின்றனர். நதிநீர் கடலுக்குள் செல்லவில்லை என்றால் கடல் நீர் நிலத்திற்கு அடியில் புகுந்து விடும். அப்போது உப்புநீர் தான் நமக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சத்குரு நதிகளை மீட்போம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நம்முடைய வாழ்க்கைக்கு ஜீவாதாரமாக உள்ள காவிரி, தலைக்காவிரியில் தொடங்கி கர்நாடகம், தமிழகம் வழியாக காரைக்கால் கடைமடை பகுதிக்கு வருகிறது. கடந்த கால சரித்திரத்தை புரட்டி பார்த்தால், காவிரி நீருக்காக மாநிலங்கள் சண்டையிட வேண்டிய அவசியம் இல்லாத சூழ்நிலை இருந்தது. இது தற்போது மாறி காவிரி நீருக்காக போராட வேண்டியுள்ளது.

காவிரி படுகையில் இருந்த மரங்களை வியாபார ரீதியாகவும், சொந்த காரணத்திற்காகவும் வெட்டியதால் பருவநிலை மாறி மழை பொழிவது நின்றது. இதனால் காவிரி நீருக்காக இன்று நாம் உச்சநீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறோம்.

நீர் நிலைகளை காக்க, மரங்களை வளர்க்க வேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். புதுச்சேரியில் தனியார் பங்களிப்புடன் மாநில அரசு நீர்நிலைகளை தூர்வாரி வருகிறது. மக்கள் அமைதியாக, எல்லா வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான் சத்குருவின் எண்ணம். மரக்கன்றுகளை நடும் அவரது பயணத்தில் புதுவை அரசின் பங்கும் உண்டு. காவிரி கடைமடை பகுதிக்கான காரைக்கால் படுகையில் அரசே மரங்களை நடும்.

புதுவை அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.10 ஆயிரம் மானியம் அறிவித்துள்ளோம். சொந்த நிலங்களில் காடு வளர்ப்பவர்களுக்கு இந்த மானியம் வழங்க வேண்டும் என்று சத்குரு கூறியுள்ளதை கண்டிப்பாக செய்வோம். சுனாமி, தானே புயல் போன்ற இயற்கை சீற்றத்தின்போது போது புதுவையில் நிறைய மரங்கள் விழுந்துவிட்டன. ஈஷா யோகா மையத்தினர் அரசுடன் இணைந்து பசுமையான புதுவையை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோகுலகிருஷ்ணன் எம்.பி, அரசு அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஜக்கி வாசுதேவ் புதுவையில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்