நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் அரசு பஸ் சிக்கியதால் பரபரப்பு

நாகர்கோவிலில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் அரசு பஸ் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-15 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. தற்போது அவ்வை சண்முகம் சாலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து கட்டபொம்மன் சந்திப்பு வரை பாதாள சாக்கடை பணிகள் முடிந்துள்ளன.

எனினும் அங்கு இன்னும் சாலை சீரமைக்கப்படவில்லை. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அரைகுறையாக மூடப்பட்டு இருப்பதால் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளிக்கிறது. ஆனாலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தட்டுத்தடுமாறி அந்த வழியாக சென்று வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த வழியாக பஸ்களை இயக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.

குழிக்குள் பஸ் சிக்கியது

அதன்படி நேற்று காலையில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தடிக்காரன்கோணத்துக்கு பயணிகளுடன் புறப்பட்ட அரசு பஸ்சை முதன் முதலாக அவ்வை சண்முகம் சாலை வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர். உடனே, அரசு பஸ் டிரைவரும் அந்த வழியாக பஸ்சை இயக்கினார்.

பாதி தூரம் கடந்த போது பஸ் திடீரென பாதாள சாக்கடை குழியில் சிக்கிக் கொண்டது. பஸ்சை தொடர்ந்து இயக்க டிரைவர் போராடினார். ஆனாலும் குழியில் இருந்து பஸ் வெளியே வரமுடியவில்லை. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி வேறு பஸ்சில் சென்றனர்.

இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து பஸ்சை குழியில் இருந்து வெளியே கொண்டு வர போராடினார்கள். இதற்கிடையே மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பஸ்சை மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்கள் கோரிக்கை

பாதாள சாக்கடை பணிகள் முடிந்த சில நாட்களில், சீரமைக்கப்படாத சாலையில் பஸ்கள் இயக்க போலீசார் அனுமதி அளித்தது தவறு என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் சாலைகளை முழுமையாக சரி செய்த பிறகே போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்