சென்னை பாலவாக்கத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி - கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு

சென்னை பாலவாக்கத்தில், கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-09-15 23:00 GMT
ஆலந்தூர்,

சென்னை தரமணியை சேர்ந்தவர் ஜெகன்(வயது 19). இவர், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஆகாஷ் என்ற சதீஷ்(20). இவரும், மற்றொரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று ஜெகன், ஆகாஷ் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் பாலவாக்கம் கிழக்கு கடற்கரைக்கு சென்றனர். அங்கு நண்பர்கள் அனைவரும் கடலில் குளித்தனர். அப்போது வந்த ராட்சத அலை ஜெகனை கடலுக்குள் இழுத்துச்சென்றது.

இதனை பார்த்த ஆகாஷ், ராட்சத அலையில் சிக்கிய நண்பர் ஜெகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் அதில் சிக்கிக்கொண்டார். இதைகண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடலில் ராட்சத அலையில் இழுத்துச்செல்லப்பட்ட இருவரையும் தேடினார்கள்.

சிறிது நேரம் கழித்து பாலவாக்கம் கடற்கரையில் ஜெகன் உடலும், கொட்டிவாக்கம் கடற்கரையில் ஆகாஷ் உடலும் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. ராட்சத அலையில் சிக்கிய இருவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டது தெரிந்தது. நண்பர்களின் உடலை பார்த்து சக நண்பர்கள் கதறி அழுதனர்.

பலியான கல்லூரி மாணவர்கள் 2 பேரின் உடல்களையும் நீலாங்கரை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்