சாலையில் உரசிக்கொண்ட அரசு பஸ்களால் பரபரப்பு - போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், சாலையில் உரசிக்கொண்ட அரசு பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. பஸ் பயணிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.;

Update: 2019-09-15 22:15 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை திருத்தணிக்கு செல்வதற்காக அரசு பஸ் ஒன்று 25 பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது திருத்தணியில் இருந்து வந்த மற்றொரு அரசு பஸ் ஒன்று பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே வந்தது.

அப்போது கொள்ளாபுரி அம்மன் கோவில் அருகே இரண்டு பஸ் டிரைவர்களின் அலட்சியத்தால் பஸ்கள் ஒன்றொடு ஒன்று உரசிக் கொண்டு மேற்கொண்டு நகர முடியாமல் நின்று விட்டன. இதனால் அங்கு இரு பஸ் டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேற்கொண்டு பஸ்களை நகர்த்த முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பஸ் பயணிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிக்கி கொண்ட பஸ்களை பொதுமக்கள் உதவியுடன் பிரிக்க பலவிதமாக முயன்றனர். இறுதியாக பஸ்களின் சக்கரங்களின் கீழே சில கற்களைப்போட்டு பஸ்களை மெதுவாக நகர்த்தியபோது, சிக்கியிருந்த இரு பஸ்களும் மீண்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்