உஷாரய்யா உஷாரு: அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும்
உயர் வருவாய் பிரிவினர் வசி்க்கும் சிலகோடி ரூபாய் மதிப்புகொண்ட அடுக்குமாடி குடியிருப்பு என்றாலும் அங்கேயும் அழுக்கடைந்த மனங்கொண்ட பாதுகாவல் பணியாளர்கள் ஒரு சிலர் இருக்கலாம்.
அவர்களை பகைத்துக்கொண்டால் மணவாழ்க்கை முறிந்துபோகும் அளவுக்குரிய சம்பவங்கள்கூட நடக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இது!
அவள் பேஷன் துறை சார்ந்த கல்வியை கற்றுவிட்டு, சில சினிமாக்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவள். ஓரளவு பிரபலமானவள். அழகும், சுறுசுறுப்பும் நிறைந்தவள். அவளை பொது நிகழ்ச்சிகளில் பார்த்து, நகைக்கடை பிரபலம் ஒருவர் மனதை பறிகொடுத்தார். அவர் வெளிநாடுகளிலும் வணிக தொடர்புகொண்டவர். திருமணத்தில் ஆர்வம் இல்லாதவராக காணப்பட்ட அவர், அவளை பார்த்ததில் இருந்து மனம்மாறி ‘அவள் கிடைத்தால் நான் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அவரது பெற்றோர், அவளது குடும்பத்தை அணுகி திருமண விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். அவளது பெற்றோர், மகளை அவருக்கு திருமணம் செய்துகொடுத்துவிடலாம் என்று நினைத்தாலும் மகளிடம், ‘நீ விவரம் தெரிந்த பெண். உனது வாழ்க்கையை நீதான் முடிவு செய்யவேண்டும். நீ விரும்பினால் மேற்கொண்டு நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம்’ என்றார்கள்.
அவள் தனது தோழிகள் மட்டத்திலும், தனக்கு தெரிந்த பிரபலங்கள் மத்தியிலும் அவரை பற்றி விசாரித்தபோது வந்த தகவல்கள் திருப்திக்குரியவையாக இருக்கவில்லை. ‘திருமண வயதை கடந்தவர் என்றும், பெண்கள் விஷயத்தில் ‘வீக்’ ஆனவர்’ என்றும், அவளுக்கு தகவல்கள் கிடைத்தன.
அந்த தகவல்களை பற்றி அவரிடம் அவள் நேரடியாகவே விவாதிக்க, ‘திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்ற முடிவில் நான் இருந்ததால் பெண்கள் விஷயத்தில் ஜாலியான ஆளாக இருந்துவிட்டேன். உன்னை பார்த்த பின்புதான் எனக்கு திருமண ஆசையே வந்தது. உன்னை பார்த்த நாளில் இருந்து நான் விரதம் கடைபிடிப்பதுபோல் அத்தகைய தொடர்புகளில் இருந்து விலகிவிட்டேன். இனி காலம் முழுக்க நீ மட்டுமே என் வாழ்க்கையில் இடம்பெறும் பெண்ணாக இருப்பாய்’ என்று கூறி அவள் இதயத்தை கவர்ந்துவிட்டார்.
இவ்வளவு வெளிப்படையாக பேசுகிறாரே என்று நினைத்து அவளும் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாள். திருமணம் முடிந்ததும், அந்த ஆடம்பர அடுக்குமாடிக்கு குடிபுகுந்தார்கள்.
அவர் பெரும்பாலும் சுற்றுப்பயணங்களில் இருப்பார். இவளையும் வீட்டிற்குள்ளே அடைந்துகிடக்காமல், தனது பேஷன் டிசைனிங் துறையில் அதிக ஆர்வம் காட்டச்சொன்னார். ஆனால் மனைவி என்ற முறையில் அவர் எதையும் அவளிடம் மனம்விட்டு பேசுவதில்லை. அவர் என்ன தொழில் செய்கிறார், எங்கெங்கு செல்கிறார் என்பதையும் கூறுவதில்லை.
‘திருமணமான ஆறு மாதங் களிலேயே அவர் தன்னை உடல்தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அதற்காக மட்டுமே தன்னை தேடி வந்துகொண்டிருக்கிறார்’ என்பது அவளுக்கு புரிந்துவிட்டது. வேறு சில பெண்களோடு தொடர்பு இருப்பதையும் பட்டும் படாமலும் தெரிந்துகொண்டாள்.
அப்போதுதான் பேஷன் டிசைனிங் பற்றி கூடுதலாக ஒரு ‘கோர்ஸ்’ கற்றுக்கொள்ள, அவள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு சென்று ஆறுமாதங்கள் தங்கிபடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. கணவரும் உடனடியாக அதற்கு அனுமதித்தார்.
ஆறுமாதங்கள் கழித்து அவள் திரும்பிவந்தபோது அவளுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அரைகுறை பிரபலங்களாக இருக்கும் சில பெண்கள், பங்களாவில் வந்து அவளது கணவரோடு பல நாட்கள் தங்கியிருந்ததாகவும், அதனால் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் அவளது கணவரிடம் விசாரித்து, மோதிக்கொண்டதாகவும் சொன்னார்கள்.
அது அவளுக்கு அவமானத்தை கொடுத்தது. கணவர் உண்மையை ஒத்துக்கொள்ளமாட்டார் என்பதற்காக முதலில் செக்யூரிட்டியிடம் யாரெல்லாம் வந்துபோனார்கள் என்று கேட்டாள். அவர் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சாதிக்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றி, அவள் கோபத்தில் அவரை அறைந்துவிட்டாள். அதோடுவிடாமல் தனது செல்வாக்கை பயன் படுத்தி தனியறையில் அடைத்துவைத்து மிரட்ட, அவர் உண்மைகளை சொல்லிவிட்டார். வந்து தங்கியிருந்த பெண்களின் பட்டியலை அப்படியே ஒப்புவித்துவிட்டார். அதோடு உண்மைகளை மறைக்க அவர் நிறைய பணமும் பெற்று வந்திருக்கிறார்.
இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு அவள் கணவரிடம் விசாரிக்க திட்டமிட்டிருந்த சூழலில், அவள் எதிர்பார்க்காத அடுத்த விஷயம் அரங்கேறிவிட்டது. தொழில்ரீதியாக அவளை சந்தித்து பேச இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். அவர்கள் அதிக நேரம் தொழில் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று ரவுடிகள் சிலரோடு வீட்டிற்குள் புகுந்த கணவர், இருவரையும் இணைத்து கண்டபடி பேசி கலாட்டா செய்துவிட்டார். அவமானத்துடன் அவள் அங்கிருந்து வெளியேறி தாய்வீட்டிற்கு செல்லும் அளவுக்கு பிரச்சினையை பெரிதாக்கிவிட்டார்.
அவளிடம் அடிவாங்கிய அந்த காவலாளி இந்த சதியில் பெரும்பங்கு வகித்தது, அவளுக்கு பின்புதான் தெரியவந்தது. தனது கணவருக்கு கைக்கூலியாக இருக்கும் அந்த காவலாளி அதிக வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்து வருவதையும் அவள் கண்டுபிடித்திருக்கிறாள். இப்போது விவாகரத்துக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாள்.
- உஷாரு வரும்.