சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட முடிவு விஜய் வடேடிவார் தகவல்
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கூறினார்.
மும்பை,
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கூறினார்.
தொகுதி பங்கீடு
மராட்டிய சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை 95 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் காங்கிரஸ் 75 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளனர்.
சரிசமமான தொகுதிகள்..
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜய் வடேடிவார் கூறியதாவது:-
சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் கமிட்டி விரைவில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை முடிவு செய்யும். எனினும் அந்த பட்டியலை நாங்கள் உடனடியாக வெளியிட மாட்டோம். சிறிய கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏறக்குறைய சரிசமமான தொகுதிகளில் தான் போட்டியிடும். 5 தொகுதிகள் வேண்டுமானால் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு 35 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள தொகுதிகளில் சரிசமமாக பிரித்து போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.