திவாவில் சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க சென்ற அதிகாரிகளை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திவாவில் சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தானே,
திவாவில் சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க சென்ற மாநகராட்சி அதிகாரிகளை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோர்ட்டு உத்தரவு
தானே அருகே திவா கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை இடித்து தள்ளுமாறு தானே கோர்ட்டு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தானே மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் சட்டவிரோத கட்டிடங்களில் வசிக்கும் 325 குடியிருப்பு வாசிகளுக்கு காலிசெய்யும் படி நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் காலி செய்யாமல் இருந்ததால் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் மணிஷ், அசோக் தலைமையில் ஊழியர்கள் அங்கு வந்தனர்.
பொதுமக்கள் முற்றுகை
இதுபற்றி அறிந்த அந்தகட்டித்தில் வசிப்போர்கள் சுமார் 100-க்கு மேற்பட்டோர் திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும் கட்டிடத்தை இடித்து தள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இணைப்பு துண்டிப்பு
மாநகராட்சி அதிகாரிகள் முதல் கட்டமாக அங்கு சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை இடிக்கும் பணியை தொடங்கினர். மேலும் 4 சட்டவிரோத அடுக்குமாடி கட்டிடங்கள், 2 கடைகள், மற்றும் 2 மாடி கொண்ட பங்களாக்களின் குடிநீர் மற்றும் மின்சாரம் இணைப்பை துண்டித்தனர்.
மேலும் கட்டிடத்தில் வசிக்கும் மக்களிடம் 2 நாட்களில் காலி செய்யாவிடில் கட்டிடம் இடிக்கும் பணி தொடரும் என அதிகாரி தெரிவித்தார். இதனால் அங்கு வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.