பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாலையில் பவுர்ணமியையொட்டி நேற்று 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2019-09-14 21:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர்.

பவுர்ணமி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் கார்த்திகை தீபத்தன்றும், சித்ரா பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 8.15 மணிக்கு தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பகலில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும் நேற்று முன்தினம் மாலையில் இருந்து நள்ளிரவு வரை மழை விட்டு, விட்டு பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பவுர்ணமி நேற்று காலை 10.20 மணிக்கு முடிவடைந்தது. இருப்பினும் சில பக்தர்கள் நேற்று மாலை வரை கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் பகுதியிலும், கிரிவலப் பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்