விபத்தில் படுகாயம் அடைந்த என்ஜினீயருக்கு ரூ.1½ கோடி இழப்பீடு - மக்கள் நீதிமன்றம் உத்தரவு
விபத்தில் படுகாயம் அடைந்த என்ஜினீயருக்கு ரூ.1½ கோடி இழப்பீடு வழங்க மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.;
குடியாத்தம்,
குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. குடியாத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான ஆர்.சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். உரிமையியல் நீதிபதி செல்லபாண்டியன், ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விபத்து இழப்பீடு, அசல் வழக்கு, சொத்து வழக்கு, காசோலை மோசடி, குடும்ப நல வழக்கு என 226 வழக்குகளில் 1 கோடியே 84 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில், குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 42). இவர், குவைத்தில் ஆயில் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றினார். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சுரேஷ்பாபு படுகாயம் அடைந்தார். இதனால் அவரது வேலை பறிபோனது. இதனையடுத்து அவர் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான வழக்கு நேற்று மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்சூரன்ஸ் கம்பெனிக்கும், சுரேஷ்பாபு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டு ரூ.1½ கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதில் பார் அசோசியேஷன் தலைவர் எஸ்.கோதண்டன், மூத்த வக்கீல்கள் கே.மோகன்ராஜ், கே.லோகநாதன், ஜெயச்சந்திரன், எம்.செந்தில்குமார், கிரிபிரசாத் உள்பட வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் முதுநிலை நிர்வாக உதவியாளர் கே.சித்ரா செய்திருந்தார்.