கோத்தகிரி அருகே பெரியார் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு

கோத்தகிரி அருகே பெரியார் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2019-09-14 23:00 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்டது பெரியார் நகர். இங்கு சுமார் 90 குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். இது வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளதால் கரடி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைவரும் காலை மற்றும் மாலை வேளைகளில் பீதியுடன் வெளியே நடமாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து கடந்த பல நாட்களாக எரியாமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இது வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் அங்குள்ள 23 குழாய்களில் 4 குழாய்களில் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற குழாய்கள் உடைந்து கிடக்கின்றன. மேலும் உடைந்த குழாய்களில் இருந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இது தவிர முறையான கழிப்பிட வசதி இல்லாததால், பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பெரியார் நகர் பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள சில தெருவிளக்குகளும் பழுதாகி எரியாமல் கிடக்கின்றன. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் நிம்மதியாக இரவில் தூங்க முடியவில்லை. எப்போதும் பீதியுடன் வாழ வேண்டி உள்ளது. குடிநீர் குழாய்களும் உடைந்து கிடப்பதால், குடிநீரின்றி அவதிப்படுகிறோம். போதிய கழிப்பிட வசதியும் இல்லை. கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10 கழிப்பிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த கழிப்பிடத்துக்கு செல்லும் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடிவது இல்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்