‘இந்தி மொழியை திணித்தால் எதிர்ப்போம்’ - ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

இந்தி மொழியை திணித்தால் எதிர்ப்போம் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2019-09-14 23:30 GMT
மேலூர்,

மேலூர் சந்தைப்பேட்டையில் அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.யுமான ராஜன்செல்லப்பா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஜெ.பேரவை புறநகர் மாவட்ட செயலாளரும், மதுரை ஆவின் தலைவருமான தமிழரசன், மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஜபார், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி பெரியசாமி, நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ராஜன்செல்லப்பா பேசும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பதாலேயே காவிரி, முல்லைப்பெரியாறு போன்றவற்றில் தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கின்றது. டி.டி.வி.தினகரனை நாங்கள் விமர்சனம் செய்யவில்லை.

எனினும் குறிப்பிட்ட சிலரே அவர் பக்கம் உள்ளனர். டி.டி.வி.தினகரன் மட்டுமல்ல, கமல், சீமான் போன்றோருக்கு தமிழகத்தில் 5 சதவீதம் வரை மட்டுமே வாக்கு வங்கி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மதம், சாதியை வைத்து இனி அரசியல் செய்யும் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாது என்றார்.

கூட்டம் முடிந்தபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தவிர்க்கவும் என்ற தலைமையின் உத்தரவுபடி நாங்கள் கட்டுபட்டுள்ளோம். பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் இந்தி மொழி குறித்து பேசியது, அவருடைய தனிப்பட்ட கருத்து. மத்திய அரசுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே நல்லுறவு உள்ளது.

ஆனால் இந்தி எந்த வகையில் வந்தாலும் மறுப்போம். திணிக்கப்பட்டால் எதிர்ப்போம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்