17 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி தினேஷ் குண்டுராவ் பேட்டி
கர்நாடகத்தில் காலியாக உள்ள 17 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காலியாக உள்ள 17 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் 2 பேர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டனர். இதனால் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதனால் அந்த 17 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த 17 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று சித்தராமையா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள ராணிபென்னூர் உள்பட 8 தொகுதிகளுக்கான காங்கிரஸ் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அந்த 8 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு, வெற்றி வாய்ப்பு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மத்திய அரசு புறக்கணிப்பு
மாநிலத்தில் காலியாக உள்ள 17 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்றைய (அதாவது நேற்று) கூட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 8 தொகுதிகள் குறித்தும், அந்த தொகுதிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகள் கேட்கப்பட்டது. ஏற்கனவே அந்த 8 தொகுதிகளின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள அமைக்கப்பட்ட குழுவினர், தாங்கள் தயாரித்த அறிக்கையை வழங்கியுள்ளனர். இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பா.ஜனதா அரசு தவறி விட்டது. நிவாரண பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ரூ.10 ஆயிரம் மட்டுமே அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு சரியான நிவாரணம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கர்நாடகத்தை மத்திய அரசு முற்றிலும் புறக்கணித்து விட்டது.
தனித்து போட்டி
பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறதா?, இல்லையா? என்பதே தெரியவில்லை. 17 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி வருகிறது. பெங்களூரு புறநகர் ஒசகோட்டையில் வருகிற 21-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, இடைத்தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பணிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இடைத்தேர்தல் நடைபெறும் சந்தர்ப்பத்தில், கூட்டணி குறித்து யோசிக்கலாம். கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்போம்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.