விநாயகர் சிலைகள் கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழப்பு
விநாயகர் சிலைகள் கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
விநாயகர் சிலைகள் கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்.
ஆனந்த சதுர்த்தி
மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வான ஆனந்த சதுர்த்தி (சிலைகள் கரைப்பு) நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சர்வஜனிக் மண்டல்கள் மற்றும் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நேற்று காலை வரை கரைக்கப்பட்டன.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை, தானே...
இதில் அமராவதி மாவட்டத்தில் 4 பேரும், ரத்னகிரியில் 3 பேரும், நாசிக், சிந்துதுர்க், மும்பை தாராவியில் தலா 2 பேரும், தானே, துலே, புல்தானா, அகோலா, பண்டாராவில் தலா ஒருவரும் உயிரிழந்து இருக்கின்றனர்.
தானே மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி இறந்தது கசாரா பகுதியை சேர்ந்த கல்பேஷ் ஜாதவ் என்ற 15 வயது சிறுவன் ஆவான்.
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் தண்ணீரில் மூழ்கி 18 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.