‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் சாத்தியம் இல்லை: “பிரதமர் மோடி துக்ளக் ஆட்சி நடத்துகிறார்” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
“பிரதமர் மோடி துக்ளக் ஆட்சி நடத்துகிறார்“ என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த முக்காணி ரவுண்டானாவில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு அறிவித்த ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் சாத்தியம் இல்லாதது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2½ லட்சம் பேர் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 4 மாதங்கள் சொந்த மாநிலத்துக்கு சென்று விடுவார்கள். உணவுப்பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதே சிரமம். இதில் ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு திடீரென்று எப்படி அதிகப்படியான உணவுப்பொருட்களை வினியோகம் செய்ய முடியும்? அனைவரிடமும் ரேஷன் கார்டு இருந்தாலும், அவர்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கப்பெறாத நிலையை ஏற்படுத்தும்.
உணவுப்பொருட்கள் வினியோகத்தை மாவட்ட நிர்வாகமே சிறப்பாக செய்து வருகிறது.
இதனை மத்திய அரசு கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? நாடு முழுவதும் அதிகார பரவலை ஏற்படுத்தியவர் ஜவகர்லால் நேரு. ஆனால் மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். அவர் துக்ளக் ஆட்சி நடத்துகிறார்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தால் லாரி டிரைவருக்கு ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததால், அவர் மோட்டார் சைக்கிளே தனக்கு வேண்டாம் என்று தீயிட்டு கொளுத்தி உள்ளார். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் போலீசாரை நியமித்தால் போதுமானது. மக்களின் நிலைமைக்கு ஏற்றார்போன்று தான் அபராதம் விதிக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் ஆட்சியானது துன்பகரமானது. எந்த துறையிலும் நாடு ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை. பிரதமராக மன்மோகன்சிங் இருந்தபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. தற்போது அது 5 சதவீதமாக குறைந்து விட்டது என்று மத்திய அரசே தெரிவிக்கிறது. எந்த ஒரு துறையிலாவது நாடு முன்னேற்றம் அடைந்தது என்று நிரூபித்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை’ என்பதைப் போன்று பா.ஜனதாவின் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
தி.மு.க.வுடன் காங்கிரசுக்கு நல்ல உறவு உள்ளது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அங்கு யார் போட்டியிடுவது என்பது பற்றி முடிவு செய்வோம்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
பின்னர் அவர், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 400 மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பைகளை வழங்கினார். அதன்பிறகு தென்திருப்பேரையில் நடந்த காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.