ஷேர் ஆட்டோக்களில் கூடுதலான பயணிகளை ஏற்ற அனுமதிக்க கோரி , பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட டிரைவர்கள்
ஷேர் ஆட்டோக்களில் கூடுதலான பயணிகளை ஏற்ற அனுமதிக்க கோரி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம், விவேகானந்தர் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது கூடுதலான ஆட்களை ஏற்றினால், ஆட்டோக்களின் உரிமத்தை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்வதாக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிவுரையை மறுபரிசீலனை செய்யக்கோரி பல்வேறு கோஷங்களை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் எழுப்பினர். அப்போது ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களில் சிலரை கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம், செயலாளர் ரெங்கநாதன், ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை, விவேகானந்தர் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் சென்று கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. தற்போது பெட்ரோல்- டீசல் விலை உயர்வு மற்றும் ஆட்டோ உதிரிபாகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட குறைவாக வசூலித்து வருகிறோம். தற்போது புதிய மோட்டார் வாகன சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டண உயர்வும், காப்பீடு தொகையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆட்டோ உரிமத்தின்படி பயணிகளை ஏற்றினால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கூடுதலான பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களில் ஒரு சிலரை கலெக்டரை சந்திக்க அனுமதி கொடுத்தனர். அப்போது அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பசும்பலூரில் இருந்து நெற்குணம் செல்லும் சாலையில் அய்யனார் கோவில் அருகே பொது கிணறு உள்ளது. அதனருகே மற்றொரு புதிய கிணறு வெட்டுவதற்கு ஒரு சிலரின் தூண்டுதலினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தெரிகிறது. இதனால் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வேறொரு இடத்தில் புதிய கிணறு வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை சிறிது நேரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், இரூர் கிராமத்தில் புதியதாக இயங்கி வரும் தார் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் வெளியேறும் கரும்புகையால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், தலைவலி, கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த தனியார் தார் பதப்படுத்தும் நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குன்னம் தாலுகா லப்பைக்குடிகாடு காயிதே மில்லத் நகரை சேர்ந்த அபுதாகீர், அவரது மனைவி லைலா ஆகியோர் நூதன முறையில் எங்களுக்கு உயிர் பிச்சை, மானம் பிச்சை, வீடு பிச்சை போடுங்கள் என்று ஒரு காகிதத்தில் எழுதி அதனை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த அரங்கத்தில் இருந்த அதிகாரிகளிடம் காண்பித்தும், கலெக்டரிடம் காண்பித்தும், பின்னர் ஒரு மனுவினை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில், என்னையும், எனது கணவரையும், மாமானார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மங்களமேடு போலீஸ் நிலையத்திலும், போலீஸ் சூப்பிரண்டிடமும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுத்தப்பாடில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.