விபத்தில் இறந்த விவசாயி வழக்கில் திடீர் திருப்பம்‘வேன் மோதி கீழே விழுந்தவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்றேன்’- வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த விபத்தில் இறந்த விவசாயி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேன் மோதி கீழே விழுந்தவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக சரண் அடைந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-09-09 22:30 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உயிலம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி மனிஷா (30). இவர்களுக்கு சுமித்ரா, பரத் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முருகன் மோட்டார்சைக்கிளில் பனியம்பள்ளியில் இருந்து உயிலம்பாளையத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் உயிலம்பாளையத்தை நெருங்கும்போது, பின்னால் இருந்து வந்த ஒரு வேன் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

விபத்தில் படுகாயம் அடைந்து கிடந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் முருகன் இறந்துவிட்டார்.

இந்த சம்பவத்தை புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வேன் எது? என்று வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நேற்று காலை முருகனை கொன்றதாக புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையத்தை சேர்ந்த ஜீவபாலன் என்பவர் அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி பழனிசாமியிடம் சரண் அடைந்தார்.

பழனிசாமி உடனே ஜீவபாலனை புஞ்சைபுளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அங்கு போலீசாரிடம் ஜீவபாலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

“நான் முருகனிடம் பணம் வாங்கி இருந்தேன். பணத்தை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை. ஆனால் முருகன் தினமும் என்னை பணம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டினார். மேலும் என் வீட்டுக்கே வந்து அவமானப்படுத்த போவதாக கூறினார்.

இதனால் முருகனை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று இரவு அவர் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அவருக்கு தெரியாமல் நானும் என்னுடைய வேனில் பின்தொடர்ந்து சென்றேன். ஒரு இடத்தில் மோட்டார்சைக்கிள் மீது வேகமாக வேனை மோதினேன். இதில் தூக்கிவீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்து உயிருக்கு பேராடினார்.

ஆனாலும் எனக்கு ஆத்திரம் தீரவில்லை. பின்னர் வேனில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து அவருடைய தலையில் அடித்தேன்.

அதன்பிறகு அங்கிருந்து வேனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டேன். அதன்பின்னர் அதிகாலை முருகன் இறந்துவிட்டது எனக்கு தெரியவந்தது. இருந்தாலும் போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேனை தேடி வருவது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதனால் நானே சரண் அடைந்து விட்டேன்“ என்றார்.

இதைத்தொடர்ந்து ஜீவபாலனை போலீசார் கைது செய்தார்கள். விபத்தில் விவசாயி ஒருவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரை வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக சரண் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்