கள்ளக்குறிச்சி, தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருட முயற்சி

கள்ளக்குறிச்சி தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருட முயன்ற மர்மநபர்கள், உண்டியலை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.;

Update: 2019-09-09 22:30 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த தேசிகர் என்பவர் பட்டாச்சாரியாராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்ததும் 8.30 மணி அளவில் கோவிலை பூட்டி விட்டு, அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது பூட்டை திறந்த அவரால், கதவை திறக்க முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் உதவியுடன் கதவை திறக்க முயன்றார். ஆனாலும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து கோவிலின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி கோவிலுக்குள் குதித்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் பெயர்த்தெடுக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவில் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் சுற்றுச்சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் உட்புறமாக கதவை பூட்டியுள்ளனர். பின்னர் கோவிலில் இருந்த 4 கண்காணிப்பு கேமராக்களில் 3 கேமராக்களை மேல்புறமாக திருப்பி வைத்து விட்டு உண்டியலை பெயர்த்தெடுத்துள்ளனர். தொடர்ந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மர்மநபர்களால் உண்டியலை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பி சென்றதும், கோவில் கொடிமரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்மநபர்கள் பார்க்காததால், அதில் அவர்கள் திருட முயன்ற காட்சி பதிவானதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்