பெங்களூரு அருகே துப்பாக்கியால் சுட்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை - பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு

பெங்களூரு அருகே, பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் துப்பாக்கியால் சுட்டு கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-08 22:40 GMT
கோலார் தங்கவயல்,

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார்(வயது 40). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவருடைய மனைவியும் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் பெங்களூருவில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பிரசாந்த் குமார் தனது வீட்டைவிட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி, பிரசாந்த் குமாரை பல இடங்களில் தேடினார். அவருடைய நண்பர்கள், அவருடன் பணிபுரிபவர்கள் ஆகியோரிடமும் விசாரித்தார். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பெங்களூரு அருகே கோலார் ரோடு சுஞ்சதேனஹள்ளி மேம்பாலம் பகுதியில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி கோலார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் வீட்டிலிருந்து மாயமான பிரசாந்த் குமார் என்பதும், அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் அவருடைய உடலின் அருகே அவரது மோட்டார் சைக்கிளும் நின்று கொண்டிருந்தது.

இதற்கிடையே போலீசார், பிரசாந்த் குமாரின் சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பிரசாந்த் குமார் தனது சாவுக்கான காரணம் குறித்து உருக்கமாக சில தகவல்களை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் எழுதி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

நான்(பிரசாந்த் குமார்), எனது சொந்த ஊரில் பல ஏக்கர் அளவில் நிலங்கள் வாங்கி இருந்தேன். பின்னர் அந்த நிலங்களை விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்தேன். ஆனால் பங்குச்சந்தையில் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நான் கடன் வாங்கினேன். அந்த கடனையும் என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை. பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து என்னால் மீண்டு வர முடியாததால் நான் வாழ்வில் வெறுப்படைந்தேன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் பிரசாந்த் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசாந்த் குமார் பயன்படுத்தியது அவருடைய சொந்த துப்பாக்கியா? அல்லது கள்ளத்துப்பாக்கியா? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்