சேலம் அருகே, தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

சேலம் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-09-08 22:15 GMT
சேலம்,

சேலத்தை அடுத்துள்ள வீராணம் சின்னனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சக்திவேல் (வயது 34). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மோகனாம்பாள் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சக்திவேல் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவில் மோகனாம்பாள், கணவரிடம் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். நேற்று காலை சக்திவேலின் வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது, வீட்டிற்குள் தூக்குப்போட்டு சக்திவேல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்