குத்தாலம் அருகே பரிதாபம்: 2 மகள்களை கொன்று பெண் தற்கொலை
குத்தாலம் அருகே 2 மகள்களை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
குத்தாலம்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் வடமட்டம் கிராமம் உள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள இந்த கிராமத்தின் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் அப்துல்ஆரிப். இவருடைய மனைவி நிலோபர்பர்வீன் (வயது27). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆப்ரினா (4), ஆப்ரா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
அப்துல்ஆரிப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் நிலோபர்பர்வீன், மகள்களுடன் வடமட்டம் கிராமத்தில் வசித்து வந்தார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவருடைய வீட்டு வாசல் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது நிலோபர்பர்வீன் மற்றும் அவருடைய மகள்கள் ஆப்ரினா, ஆப்ரா ஆகியோர் வீட்டில் பிணமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக பாலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று நிலோபர்பர்வீன் மற்றும் அவருடைய மகள்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நிலோபர்பர்வீனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததும், இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.
மேலும் தனக்கு பிறகு குழந்தைகளை யாரும் கவனிக்கமாட்டார்கள் என நினைத்த அவர், குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார். இதில் 3 பேரும் பரிதாபமாக இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நிலோபர்பர்வீனுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவுக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்பது பற்றி திருவாரூர் உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த பெண் ஒருவர் தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.