ஜெருசலேம் புனித பயணத்துக்கு ரூ.20 ஆயிரம் நிதிஉதவி - விண்ணப்பிக்க 30-ந் தேதி கடைசி நாள்
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் நகருக்கு புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. தகுதி உள்ள நபர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர்,
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20-ம் ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.
இப்புனித பயணம் இந்த மாதம்(செப்டம்பர்) முதல் அடுத்த ஆண்டு(2020) மார்ச் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயண காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெறலாம்.
இது தவிர www.bcmbc mw. tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்துக்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் தபால் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.