செம்மஞ்சேரியில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்துக்கொலை உறவினர் கைது

செம்மஞ்சேரியில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-08 23:00 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கண்ணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இதேபோல் மது குடித்து விட்டு வந்து தனது மனைவி சாந்தியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சாந்தி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் பெயிண்டராக உள்ள தனது அண்ணன் ராஜா வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார். அங்கு சென்ற கண்ணன் தனது மனைவியை தன்னுடன் அனுப்புமாறு தகராறு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வந்த கண்ணன் நேராக ராஜா வீட்டுக்கு சென்று தனது மனைவியை பற்றியும், மனைவியின் அண்ணன் ராஜா குடும்பத்தினர் குறித்தும் கேவலமாக பேசியதாக தெரிகிறது. இதனால் ராஜாவுக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா கண்ணனை அடித்து கீழே தள்ளி வீட்டில் இருந்து எடுத்து வந்த ஆக்சா பிளேடால் கண்ணனின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவர் மீது வழக்குபதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்