குறிஞ்சிப்பாடி அருகே, என்.எல்.சி. தொழிலாளியை கொன்ற இரட்டை சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது
குறிஞ்சிப்பாடி அருகே என்.எல்.சி. தொழிலாளியை கொன்ற வழக்கில் இரட்டை சகோதரர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் நமச்சிவாயம். இவரது மகன் ஜனார்த்தனன் (வயது 24). டிப்ளமோ படித்த இவர், என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜனார்த்தனன் பொருட்கள் வாங்குவதற்காக மெயின்ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது.
அப்போது அவர்கள் கத்தியால் ஜனார்த்தனனின் வயிற்றில் குத்தி கிழித்தனர். இதில் ஜனார்த்தனன் குடல் சரிந்து கீழே விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து ஜனார்த்தனனின் அண்ணன் பிரபாகரன் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜனார்த்தனனின் நண்பர் பாபு, பக்கத்து ஊரான கோ.சத்திரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கேலி செய்துள்ளார். இது தொடர்பாக ஜனார்த்தனனுக்கும், கோ.சத்திரத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோ.சத்திரத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் ஆனந்தராஜ்(23), சண்முகம் மகன் தமிழரசன்(25), ராஜகோபால் மகன் தமிழரசன்(20), 18 வயதுடைய இரட்டை சகோதரர்கள், தெய்வசிகாமணி மகன் தமிழ்மணி, ஜோதிலிங்கம் மகன் பாலமுருகன் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் வெங்கடாம்பேட்டைக்கு சென்று ஜனார்த்தனனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆனந்தராஜ், ச.தமிழரசன், ரா.தமிழரசன், 18 வயதுடைய இரட்டை சகோதரர்கள் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஆனந்தராஜ், ச.தமிழரசன், ரா.தமிழரசன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 18 வயதுடைய இரட்டை சகோதரர்கள், கடலூர் கோண்டூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ்மணி, பாலமுருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.