கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Update: 2019-09-07 23:33 GMT
மைசூரு, 

கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் (ஆகஸ்டு) கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து கடந்த மாதம் 12-ந்தேதி கே.ஆர்.எஸ். அணை (மொத்த கொள்ளளவு-124.80 அடி), கபினி அணை (கடல் மட்டத்தில் இருந்து மொத்த கொள்ளளவு 2,284 அடி) முழுகொள்ளளவை எட்டியது. தற்போது வரை இரு அணைகளும் தண்ணீர் நிரம்பிய நிலையில் கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் அணைகளை பார்வையிட சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 55 ஆயிரத்து 774 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 53 ஆயிரத்து 65 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றின் குறுக்கே உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு குழாம் சேதமடைந்தது. மேலும் பல்வேறு வகையான பறவையினங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு செத்தன. அத்துடன் பறவைகளின் கூடுகளும் வெள்ளத்தில் சிக்கி நாசமானது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இருந்து நேற்று வரை ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் மூடப்பட்டு கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் கபினி அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 27 ஆயிரத்து 342 கனஅடியாகவும், நீர்வெளியேற்றம் 20 ஆயிரத்து 333 கனஅடியாகவும் இருந்தது. கபனி அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் கபிலா ஆற்றில் பாய்ந்தோடி, டி.நரசிப்புரா அருகே திருமகூடலுவில் காவிரியுடன் சங்கமித்து தமிழகத்திற்கு செல்கிறது. நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 73 ஆயிரத்து 398 கனஅடி நீர் செல்கிறது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்