மது போதையில் விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

மது போதையில் விசாரணைக்கு சென்ற போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update: 2019-09-07 22:38 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் ராமு(வயது 45). இவர் போலீஸ் நிலையத்திற்கு வந்த ஒரு புகார் குறித்து விசாரிக்க ஒத்தக்கடை பகுதிக்கு சென்றார். அங்கு அழகேசன், லட்சுமி ஆகியோரிடம் புகார் குறித்து விசாரித்தார். அப்போது ஏட்டு ராமு மது போதையில் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரியவருகிறது.

எனவே இது குறித்து அழகேசன் ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் ஏட்டு ராமு மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராமுவை ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரிக்க முயன்றனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது குறித்து தனிப்பிரிவு போலீஸ்காரர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமு அங்கிருந்த தனிப்பிரிவு போலீஸ்காரரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. உடனே அவரை அங்கிருந்த சக போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

மது போதையில் விசாரணைக்கு சென்றதுடன், போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரரை தாக்க முயன்ற ஏட்டு ராமுவை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இது போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்