திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் - அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.;

Update:2019-09-08 03:45 IST
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். செல்வராசு எம்.பி., ஆடலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர், நிருபர் களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் அதிகம் கொண்ட இப்பகுதியில் ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டுமென்றால் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தது. தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 9 பேர் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவக்குமாா் அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்