மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சேலத்தில், ஜி.கே. மணி பேட்டி

மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சேலத்தில் ஜி.கே. மணி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-09-07 22:00 GMT
சேலம், 

சேலம் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் நேற்று சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமை தாங்கினார். சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், பசுமை தாயக மாநில இளைஞரணி செயலாளர் சத்ரியசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் கட்சி வளர்ச்சி குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் வீணாக செல்வதை தடுக்க, மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் மூலம் 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்கது.

ஆனால் இந்த திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள சில ஏரிகளில் நீர் நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் அனைத்து நீர் வழித்தடங்களையும் தூர்வாரி ஏரிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ரெயில்வே துறை தேர்வுகளை தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசு, தமிழக உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி வழங்காமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஜவ்வரிசிக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்ய வேண்டும்.

சந்திரயான்-2 இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய முயற்சிக்கு எடுத்துக்காட்டாகும். இதில் தற்போது ஏற்பட்டது தோல்வியே கிடையாது. இந்திய விஞ்ஞானிகள் மேலும் முயற்சிகள் செய்ய வேண்டும். எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம்.

10 ஆண்டுகளுக்கு மேலான சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்காமல் பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும். தமிழகத்தில் வறட்சியை போக்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு 28 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்