ஆவின் பால் பூத் வைப்பதற்கு மானியத்துடன் வங்கிக்கடன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
ஆவின் பால் பூத் வைப்பதற்கு மானியத்துடன் வங்கிக்கடன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.;
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் சுய வேலைவாய்ப்பு மூலம் ஆவின் பால் பூத் வைப்பதற்கு வங்கிக்கடன் பெற்று பயன்பெறும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக நடப்பாண்டு முதல் உயர்த்தி வழங்க செயல்படுத்தப்பட்டு உள்ளது.
ஆவின் நிறுவனத்தின் மூலம் இதன் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து பலன் பெறும் வகையில் உரிமையாளர் சில்லறை விற்பனை நிலையம் முகவர்களாக தமிழகத்தில் 200 நபர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களான பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து குளிர்சாதன பெட்டிகளில் வைத்தும், இதர முறைகளில் பராமரித்து விற்பனை செய்ய ஏதுவாக இடத்தின் வசதியினை சொந்தமாகவோ, வாடகைக்கோ அல்லது பயனாளிகள் தமது சொந்த முயற்சியால் அனுமதி பெற்ற பின்னர் அலுவலகத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவின் நிறுவனம் மற்றும் கடனுதவி வழங்கும் வங்கியின் ஒப்புதல் பெற்ற பின்னர் இந்த அலுவலகத்தின் மூலம் மானியம் வழங்கப்படும். 2019-20-ம் ஆண்டிற்கு பால் பொருட்களை விற்பனை செய்ய மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் திட்ட அறிக்கை மற்றும் இதர இணைப்புகளான மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 14, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகை என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.