அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் முதல் 10 இடங்களை பெற கவனம் செலுத்த வேண்டும் - ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 10 இடங்களை திருவண்ணாமலை மாவட்ட மாணவ, மாணவிகள் பெற ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர் தின விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.
கலசபாக்கம்,
கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:-
மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து வகையிலும் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் மற்றும் மணிலா பயிர் உற்பத்தியிலும், அரசு பொது சேவை மையங்கள், ‘ஜல் சக்தி அபியான்’ இயக்கத்தின் செயல்பாடு, ‘போஷான் அபியான்’ திட்டம், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டம் ஆகிய திட்டங்களிலும் முதன்மை மாவட்டமாக நமது மாவட்டம் திகழ்கிறது.
பள்ளிக் கல்வித் துறையில் திருவண்ணாமலை மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. ஆசிரியர்கள் 1-ம் முதல் 5-ம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 10 இடங்களுக்குள் வர பாடுபட வேண்டும்.
அதற்காக ஆசிரியர்கள் தங்களது முழு கவனத்தையும் மாணவர்களிடம் செலுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் உட்பட பல்வேறு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வழி முறைகளை ஆசிரியர்கள் கற்றுத் தந்து, அவர்கள் மனதில் நம்பிக்கை விதைத்து, கல்வியை திணிக்க வேண்டும். நம் ஒவ்வொருவரின் பெயருக்கு பின் இருக்கும் படிப்பு தான் கடைசி வரை நம்மை காப்பாற்றும். அனைவருக்கும் ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் ‘ஜல் சக்தி அபியான்’ நீர் மேலாண்மை இயக்கத்தின் ‘நீர் வங்கி’க்கு தனது பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டரிடம் வழங்கினார்.
மேலும் கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 1,648 தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு உட்பட அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 500பேருக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர். மேலும் தென்மகாதேவிமங்கலம் அரசு பள்ளிக்கு ரூ.36 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. புரோஜக்டர் கருவியும் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.