எடப்பாடி அருகே, மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி

எடப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள். கோவில் பண்டிகையை காண நண்பர்களை அழைத்து வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இது போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-09-07 22:15 GMT
எடப்பாடி, 

எடப்பாடியை அடுத்த இருப்பாளியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ஜவகர் (வயது 24), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய நண்பர்கள் கச்சுப்பள்ளியை சேர்ந்த பழனியப்பன் மகன் தங்கபாலு (20), தோரமங்கலத்தை சேர்ந்த செல்வம் மகன் சண்முகராஜா (18) ஆகியோர் ஆவார்கள்.

நேற்று முன்தினம் இரவு இருப்பாளியில் கோவில் பண்டிகை நடந்தது. இந்த பண்டிகையை காண, தனது நண்பர்களை அழைத்து வர ஜவகர் மோட்டார் சைக்கிளில் ஜலகண்டாபுரத்திற்கு வந்தார்.

அங்கு ஏற்கனவே அவருக்காக காத்திருந்த நண்பர்கள் தங்கபாலு, சண்முகராஜா ஆகியோரை அழைத்து கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து இருப்பாளிக்கு புறப்பட்டு வந்தனர். மோட்டார் சைக்கிளை ஜவகர் ஓட்டினார்.

கலர்பட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது அந்த வழியாக எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த ஜவகர், தங்கபாலு, சண்முகராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்கள் 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், ஜவகர் மற்றும் தங்கபாலு ஆகியோர் இறந்து விட்டனர்.

சண்முகராஜா மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டிவந்த குருக்கப்பட்டியை சேர்ந்த மாதையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் பண்டிகையை காண நண்பர்களுடன் வந்த தனியார் நிறுவன ஊழியர் நண்பர் ஒருவருடன் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்