விதிமுறைகளை மீறி மண் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மணல்மேடு அருகே விதிமுறைகளை மீறி மண் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை,
மணல்மேடு அருகே கேசிங்கன் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் விதிமுறைகளை மீறி 20 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் தோண்டி சவுடு மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் குறையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்தபகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் ஒன்றுகூடி 2-வது முறையாக கேசிங்கன் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விளை நிலங்களில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும். அனுமதியின்றி மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் இந்துமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார், அனுமதியின்றி மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-மணல்மேடு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.