ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய முன்னாள்படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்னக ரெயில்வேயில் காலியாக உள்ள டிராக்மேன், உதவியாளர், டீசல் மெக்கானிக் உதவியாளர், எலக்ட்ரிக்கல் உதவியாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 393 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கு 15 ஆண்டுகள் படைப்பணி முடித்த 13-8-2010 அன்றைய தேதியில் 50 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் www.rrcmas.in என்ற இணையதள முகவரியில் வருகிற 12-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பயனடையுமாறும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.