ஆவூர் அருகே அரசு குவாரிகளில் லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
ஆவூர் அருகே அரசு குவாரிகளில் லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விராலிமலை,
விராலிமலை தாலுகா ஆவூர் அருகே மதயானைப்பட்டி கோரையாற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் லாரிகளில் மணல் அள்ளி அங்கிருந்து விராலிமலை அருகே உள்ள அரசு மணல் கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு மணல் வழங்கப்படுகிறது. இந்த பணியை பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் குவாரியில் இருந்து வழக்கம்போல பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி லாரிகளில் அனுப்பினர்.
அப்போது ஆவூரை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மழைகாலங்களில் கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீர் இந்த இடத்தில் உள்ள கால்வாய் வழியாகத்தான் ஆவூர் பெரியகுளத்திற்கு பிரிந்து செல்லும். இந்த பகுதியில் அதிக அளவு ஆழத்தில் மணல் அள்ளினால் குளத்திற்கு எப்படி தண்ணீர் போகும் என்று கூறியவாறு மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கு நின்ற 10-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 2 பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், விராலிமலை தாசில்தார் சதீஷ் சரவணகுமார், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.