குற்ற வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குற்ற வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2019-09-07 22:00 GMT
கோட்டைப்பட்டினம், 

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நூர்தீன்(வயது 45). இவர் அதே பகுதியில் கார் டிராவல்ஸ் மற்றும் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி நூர்தீன் குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து நூர்தீன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராமநாதன்(30), லட்சுமணன் மகன் அருண்குமார்(30) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 50 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 2 பேர் மீதும் திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ராமநாதன், அருண்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் உமா மகேஸ்வரி ராமநாதன், அருண்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமநாதன், அருண்குமார் ஆகியோரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் வழங்கினர். பின்னர் அவர்கள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், பாபு உள்பட 4 பேர் அன்னவாசல் அருகே உள்ள பேயால் விளக்குரோடு அருகே சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்த போலீசார் முயன்றனர். அப்போது டிராக்டர் டிரைவர் டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து, போலீசார் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் டிராக்டரை தூரத்தி சென்று, மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் விளாபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் கணேசன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் உமா மகேஸ்வரி கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கணேசனிடம், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் வழங்கினர். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்