காதில் ‘ஹெட்போன்’ மாட்டிக் கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி சாவு; பணகுடி அருகே பரிதாபம்

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். ஹெட்போன் மூலம் அவர் பாட்டு கேட்டபடி சென்றதால் இந்த விபரீத சம்பவம் நேர்ந்துள்ளது.

Update: 2019-09-07 22:45 GMT
நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் கலந்தபனையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32), மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணகுடி பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு பாலமுருகன் சென்றார்.

அப்போது அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தெரிகிறது. அந்த சமயத்தில் ரெயில் வந்தது. காதில் ‘ஹெட்போன்‘ மாட்டிக் கொண்டு அவர் பாட்டு கேட்டபடி சென்றதால் ரெயில் வருவதை கவனிக்கவில்லை. இதனால் பாலமுருகன் மீது ரெயில் மோதியது. இதில் உடல் சிதறி அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் உடல் தண்டவாளத்திலேயே கிடந்தது.

இதற்கிடையே நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட பெங்களூரு எக்ஸ்பிரஸ் பணகுடி பகுதியில் சென்றது. அப்போது, தண்டவாளத்தில் பிணம் கிடப்பதை ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர். பின்னர் ரெயிலை நிறுத்தி விட்டு நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். மேலும் உடலின் அருகில் கிடந்த ஹெட்போன் மற்றும் செல்போனையும் போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ‘ஹெட்போன்‘ மூலம் பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர், ரெயில் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்